hot sale

Saturday, 5 July 2014

யோகாவே மருந்து

யோகாவே மருந்து
இன்று யோகாவைப் பலரும் நாடுகிறார்கள். யோகாவும் காலத்துக்கு ஏற்ப வேகமாக நவீனமடைந்துவருகிறது. உடல் உபாதைகள் முதல் மனஅமைதிவரை பல்வேறு நோக்கங்களுக்காக யோகா இன்று பயிலப்படுகிறது. முதுகு வலி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்காகவும் பலர் யோகாவை நாடும் நிலையில், நவீன அறிவியல் வெளிச்சத்திலும் யோகப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதில் வியப்பில்லை.
குழந்தைகளும் யோகாவும்
சிறு வயதிலிருந்தே யோகாவைக் குழந்தைகளுக்கு ஒரு பழக்கமாக அறிமுகப்படுத்திவிட்டால், அது அவர்களுக்கு வாழ்க்கை முழுக்க உதவி செய்யும் என்பது கிருஷ்ண யோகாவின் அணுகுமுறை. "யோகாவின் ஒவ்வொரு நிலைக்கும், ஆசனத்துக்கும் ஒரு கதையை உருவாக்கி, அதன் மூலம் குழந்தைகளுக்கு யோகாவை அறிமுகப்படுத்துகிறோம். இந்த முறையைப் பின்பற்றுவதால் குழந்தைகளுக்கும் யோகா பிடித்துப்போகிறது. பிராணயாமா போன்றவற்றை சிறு வயதில் இருந்தே செய்துவருவது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றும்
யோகாவே மருந்து
"யோகா செய்வதால் சில சமயம் அறுவை சிகிச்சையைக்கூடத் தவிர்க்க முடியும். ஆனால், பலனை உடனடியாக எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். இந்த யோகா சிகிச்சையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான அம்சம் பொறுமை. மருந்துகளோடு இணைந்து நோயை வேகமாக குணப்படுத்துவதை, இந்த யோகா சிகிச்சை சாத்தியப்படுத்துகிறது. லிகமென்ட் எனப்படும் எலும்புகளைப் பிணைக்கும் தசைநாரில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக்கூட யோகாவில் தீர்வு இருக்கிறது
உடலே நம் வாகனம்
உடல்தான் மனித வாழ்வுக்குப் பிரதானம். அந்த உடலுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்குப் பெரும் உதவியாக யோகா இருக்கிறது. யோகா துல்லியமான அறிவியல், "உடலைப் புத்துணர்ச்சியாக உணர வைப்பதில் யோகாவுக்கு நிகர் எதுவும் இல்லை. பல மணி நேர ஜிம் பயிற்சியால் செய்ய முடியாததை, யோகாவால் எளிமையாக செய்துமுடித்துவிட முடியும். ஏரோபிக் பயிற்சிகள் ஏற்படுத்தும் விளைவைக்கூட யோகாவில் கொண்டுவர முடியும்,"
உடல் பருமனுக்குத் தீர்வு
உடல் பருமனைச் சமாளிப்பதற்குப் பலரும் பல வகையான சோதனைகளை மேற்கொண்டுவருகிறார்கள். ஆனால் எளிமையான வழிகள் மூலம் உடல் பருமனை யோகாவால் கட்டுப்படுத்த முடியும்,
மதம் அவசியமில்லை
யோகாசனப் பயிற்சிகளைச் செய்வதில் பலருக்கு இருக்கக்கூடிய ஒரு சிக்கல் அது மதத்தை, இந்திய ஆன்மிகத்தை முன்னிறுத்தக்கூடியது என்பதுதான். "அப்படிப்பட்ட எண்ணத்துக்கு அவசியமே இல்லை", யோகாவுக்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யோகாவை எந்த மதச் சார்பும் இல்லாமல் அணுக முடியும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். "யோகாவை முழுமையான ஒரு அறிவியலாகப் பார்க்க முடியும். இதற்கு எந்த மதச் சாயமும் அவசியம் இல்லை",
யோகாசனப் பயிற்சிகள் சிலவற்றில் ஸ்லோகங்கள் சொல்லித் தரப்படுகின்றனவே என்று கேட்டதற்கு, "ஸ்லோகங்கள் சொன்னால்தான் யோகா என்பதல்ல. இது அடிப்படையில் உடல், மனம், மூச்சு ஆகியவற்றின் ஒருங்கிணைவைச் சத்தியப்படுத்துகிறது. மன ஒருமைப்பாட்டுக்குப் பயிற்சி அளிக்கிறது. பக்தியோ, வழிபாடோ தேவைப்படுபவர்கள் அவற்றின் துணையோடு யோகாவை அணுகலாம். மற்றவர்கள், அவற்றின் துணை இல்லாமலேயே யோகாவைப் பயிற்சி செய்யலாம். இரண்டுக்கும் யோகாவில் இடம் உண்டு"
பயிற்சியாளர் அவசியம்
வலிமை, நெகிழ்வுத்தன்மை, தாங்கும் திறன் இந்த மூன்றும் சமமாகக் கலந்திருக்கும்போது, அது ஒரு முழுமையான யோகாவாக இருக்கும். "ரத்தத்தின் திசைவேகத்தைக்கூட யோகாவால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் யோகாவைப் பயிற்சியாளர் இல்லாமல் செய்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்
அறிவியல் கலை
யோகாசனப் பயிற்சிகள், யோகா சிகிச்சை என்றதும் தன்னால் முடியுமா, உடம்பு வளையுமா என்பது போன்ற கேள்விகள் சிலருக்கு எழலாம். அவரவர் உடல்நிலைக்கு ஏற்பப் பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் வழங்குவதால் இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை கயிறு, கரக்கட்டைகள், மேசை முதலான பல கருவிகள் மூலம் பயிற்சிகள் இங்கே எளிமையாக்கப்படுகின்றன. ஒவ்வொருவரது உடல்நிலை, அவரவர் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப யோகா சிகிச்சையும் பொதுவான யோகப் பயிற்சிகளும் தரப்படுகின்றன.

குடிப் பழக்கம்

இப்போதெல்லாம் நமது சினிமா ஹீரோக்கள் வசனம் பேசும் காட்சிகளைவிட கையில் மது பாட்டிலோடு புலம்பும் காட்சிகள்தான் அதிகம். அக்காட்சிகளுடன் கூட வரும் ‘மது அருந்துதல் உடல் நலத்துக்குக் கேடு’ என்ற எச்சரிக்கை வாசகமும் நமக்குப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. ஆனால், உண்மை நிலைமை மிகவும் மோசம். இந்தியாவில் சுமார் 75% ஆண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர். இதில் 20-30% பேர் அதற்கு முழு அடிமையாகிறார்கள். குடிப்பழக்கம் பெரும்பாலும் 15-25 வயதில்தான் ஆரம்பிக்கிறது. 50-60% சாலை விபத்துகள் குடிபோதையினால்தான் ஏற்படுகின்றன.
மது குடிப்பது முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கி றார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளி யாகவே மாறி விடுகிறார்கள்.
யார் போதைக்கு அடிமை?
பொதுவாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் குடிப்பழக்கத்தைப் பற்றி விசாரித்தால் “நீங்க நினைக்கிற மாதிரி நான் மொடாக்குடிகாரன் கிடையாது டாக்டர்” என்ற பதில்தான் முதலில் வரும். ஆனால், உண்மை வித்தியாசமானது. குடிப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையா, இல்லையா என்பதை நிர்ணயிக்கச் சில வரைமுறைகள் இருக்கின்றன. இது தனிப்பட்ட நபரின் எண்ணத்தைப் பொறுத்தது அல்ல. கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் சில காரணங்கள் இருந்தாலே, அந்நபர் போதைக்கு அடிமை என்றே அர்த்தம்.
# தினசரி குடிப்பது, மற்ற விஷயங்களைவிட குடிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது.
# ஆரம்பத்தில் குடித்ததைவிட அதிகம் குடித்தால்தான் போதை ஏற்படுகிறது என்ற நிலை.
# பல முறை முயன்றும் குடியை முழுவதுமாக நிறுத்த முடியாமல் தோல்வியடைதல்.
# உடல்நலத்துக்குக் கேடு என்று தெரிந்தும் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்ட பின்னரும் குடியை நிறுத்த முடியாமை.
# குடித்தால்தான் தூக்கம் வரும் அல்லது கைநடுக்கம் குறையும் என்ற நிலை.
குடிப்பதற்குக் கூறும் காரணங்கள்
‘இந்தக் கண்றாவியையா குடித்தோம்' என்ற குற்றவுணர்வோடு சிலர் காலையில் எழுவது உண்டு. ஆனால், காலையில் பிள்ளையின் தலையில் சத்தியம் செய்து சென்ற பின்னரும், மாலையில் போதையோடுதான் வீடு திரும்புவார்கள். சிலர் பெட் காபி போல் காலையில் கண் விழிப்பதே மது பாட்டில் முன்புதான். இந்த இரண்டு நிலையுமே தீவிரமான அடிமைத்தனத்தின் அறிகுறிகள். தான் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை ஒருவர் உணர்ந்து ஒத்துக்கொள்வதுதான் மாற்றத்தின் முதல் படி.
பெரும்பாலும் குடிப்பவர்களைக் கேட்டால் தாங்கள் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள். கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல்வலியை போக்கக் குடிப்பதாகவும், இளம்வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது ஜாலி மூடில் இருந்ததால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப்போக்குகள்தான் நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகிவிடும்.
நிறுத்தினால் என்ன பிரச்சினை?
தீவிர குடிப்பழக்கம் இல்லாதவர்கள் எப்போது நிறுத்தினாலும் பிரச்சினை இல்லை. ஆனால், தினசரி ஆல்கஹாலுக்குப் பழகிப்போன மூளை நரம்புகள், திடீரென குடியை நிறுத்தும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில தொந்தரவுகளைத் தருவது உண்மைதான். எனவே, அதிகப் போதைக்கு அடிமையானவர்கள் குடியை நிறுத்திய சில மணி நேரத்தில் கை, கால் நடுக்கம், தூக்கமின்மை, பதற்றம், வாந்தி, எரிச்சல் உணர்வு போன்றவை ஏற்படலாம். சிலருக்கு நிறுத்திய ஓரிரு நாட்களில் வலிப்பு அல்லது யாரோ பேசுவது போல் குரல் கேட்பது, உருவங்கள் தெரிவது, அதீத பய உணர்வு போன்றவை ஏற்படலாம். திரும்பக் குடித்தால்தான் இவை சரியாகின்றன என்ற காரணத்தைக் காட்டியே குடியைத் தொடர்வது ஆபத்தையே விளைவிக்கும்.
தொடர் குடியால் நாளடைவில் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பாதிப்புகளைவிட மேற்கூறிய தொந்தரவுகள் மிகச் சாதாரணமானவை. மேலும் மருந்துகளால் கட்டுப்படுத்தக் கூடியவை. தினசரி 800 மி.லி. குடித்தால்தான் போதைவரும் என்ற நபருக்கு, 500 மி.லி. குடித்தால் போதை ஏற்படாது. இப்படிப்பட்டவர்கள் படிப்படியாகக் குடியை நிறுத்துவது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, அதிக அடிமைத்தனத்துக்கு ஆளானவர்கள் மருத்துவ உதவியுடன் உடனடியாக, முழுவதுமாக நிறுத்தும் முறையே சிறந்தது.
மேற்கண்ட குடிபோதை நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் ‘சுயக் கட்டுப்பாடு வேண்டும்’, ‘உன்னால் முடியும்’ என்பது போல இலவசமாகக் கிடைக்கும் அறிவுரைகள் எந்தப் பலனையும் தராது. ஏனென்றால், மூளை நரம்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஏற்படும் மேற்குறிப்பிட்ட தொந்தரவுகளைச் சரிசெய்ய மனநல மருத்துவரின் உதவி அவசியம்.
குடி தருவது என்ன?
ஆல்கஹால் உடலில் சேரும் இடம் கல்லீரல்தான். இதனால் நாளடைவில் மஞ்சள்காமாலையில் ஆரம்பித்து கல்லீரல் செயலிழந்து போவதுவரை உடல்நலப் பிரச்சினைகள் தோன்றலாம். அல்சர், இதய வீக்கம் மற்றும் செயலிழப்பு, நரம்பு கோளாறுகள், கணைய வீக்கம், வைட்டமின் குறைபாடுகள், உணவு மண்டலத்தில் புற்றுநோய் போன்றவை மற்ற முக்கியப் பாதிப்புகள்.
பாதிக்கு மேற்பட்டோர் மனக்குழப்பங்கள், மனப்பதற்றம், மன அழுத்தம், தூக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள், செக்ஸ் பிரச்சினை போன்ற மனநலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். இது தவிர சமுதாயத்தில் சுயகௌரவத்தை இழத்தல், குடும்பப் பிரச்சினைகள், பணவிரயம் மற்றும் கடன், தனிமனித உறவு பாதிப்பு, விபத்துகள், தற்கொலை எனப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
‘வாழ்க்கையின் எத்தனையோ முக்கியமான சந்தோஷங்களை இழந்துள்ளோம் என்பதை, இப்போதுதான் உணர்கிறோம்’ என்பதுதான் குடிபோதையிலிருந்து மீண்டவர்களில் பெரும் பாலோர் சொல்லும் கருத்து. காலம் கடந்த பின் வருந்துவதைவிட, விழிப்புடன் போதையை எதிர்த்துச் செயல்பட்டால் தனிநபருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்வாழ்வுதான்.
குடிப் பழக்கம் நிறுத்திய பின்
#எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சும்மா இருப்பது தேவையற்ற சிந்தனைகளைத் தூண்டும்.
#ஏற்கெனவே, குடிப்பதைத் தூண்டிய சூழ்நிலைகள், மனநிலைகளில் கவனமாக இருக்கவேண்டும். உதாரணமாக பார்ட்டி, விழாக்களுக்கு மனைவியுடன் சேர்ந்து செல்லுதல், குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அங்கு இருப்பதைத் தவிர்ப்பது போன்றவை பலன் கொடுக்கும்.
#நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலோ அல்லது ‘நீ குடிக்கவேண்டாம் சும்மா பக்கத்தில் இரு’ என்று சொன்னாலோ, அந்த இடத்தில் தொடர்ந்து இருப்பது விஷப்பரீட்சைதான்.
#குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மிக அவசியம்
#முடிந்தால் ஒரு உண்டியல் வாங்கி, முன்பு தினமும் குடிப்பதற்குச் செலவு செய்த தொகையை அதில் போட்டு, சில மாதங்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் குடிப்பதற்காக எவ்வளவு பணத்தை வீணடித்திருக்கிறோம் என்பது புரியும். இது மனரீதியாக நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
#சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் அவசியம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டும் தூங்குவதற்குச் சில நாட்கள் மருந்து உட்கொள்ளலாம்.
#‘இன்றைக்கு ஒரு நாள் மட்டும் தானே’ என்று சலனப்பட்டால் இறுதியில் பழைய நிலைமைக்குச் சீக்கிரமே சென்றுவிடும். இதற்கு பீர் ஒன்றும் விதிவிலக்கல்ல. விஸ்கியில் 35-40% எத்தனால் இருப்பது போலப் பீரிலும் 5-10% உள்ளது.