hot sale

Friday, 27 June 2014

யோகாவும் ஆளுமையும்

யோகா என்று பொதுவாகச் சொல்லப்படும் யோகாசனம் நமது அரிய பொக்கிஷங்களில் ஒன்று. இன்று இந்தியாவைவிட யோகப் பயிற்சிகளும் ஆராய்ச்சிகளும் வெளிநாடுகளில்தான் பல மடங்கு நடக்கின்றன.
யோகாவுக்கு வெளிநாடுகள் இப்படிப்பட்ட இடம் தருவதால் பல திறமையான யோகா ஆசிரியர்கள் அங்கு வகுப்பு எடுக்க ஆசைப்படுகிறார்கள். காரணம் அங்குள்ள தேடல், ஆர்வம் மட்டுமல்லாமல் அதற்காக அவர்கள் கொடுக்கும் கட்டணமும் அதிகம்.
யோகாவை (குறிப்பாக ஆசனங்களை) பரவலாகப் பயிற்சி செய்வதோடு, பிற துறைகளிலும் யோகாவுக்கு இடம் அளிக்கப்பட்டுவருகிறது. விளையாட்டு, நடனம், நாடகம், கல்வி, மருத்துவம், வீர விளையாட்டுகள் என்று பல்வேறு துறையினர் யோகாவின் சில அம்சங்களையாவது தங்கள் துறைக்குக் கொண்டுசெல்கின்றனர்.
யோகா, ஆசன, பிராணாயாமத்தைத் துணிக் கயிற்றில் பயிற்சி செய்வது, ஆசனங்களைப் படகுகளில் மேற்கொள்வது, அலுவலக நேரத்தில் உட்கார்ந்தபடியே சிறிது நேரம் செய்வது, ஜிம்னாஸ்டிக் போல் செய்வது, கடும் சூட்டில் பயிற்சி செய்வது, நிர்வாணமாய்ப் பயிற்சியில் ஈடுபடுவது என்று வேறு திசைகளிலும் யோகா விரிந்துகொண்டிருக்கிறது. யோகா எங்கெல்லாம் முறையாக அணுகப்படுகிறதோ, அங்கு அது தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.
இந்தியாவில் யோகாவைப் பல விதங்களில் அணுகும் போக்கு உள்ளது. ஒரு யோகா முறை சரிவரவில்லை என்றால், வேறொன்று உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். அதேநேரம் சில அணுகுமுறைகள் பிரச்சினைகளைத் தருவதாகவும் தவறான முறைகளையும் கொண்டிருக்கின்றன. சரியான தயாரிப்பு இல்லாமல் உடலை, உள்ளுறுப்புகளை வருத்தும் போக்கும் இருக்கிறது.
யோகாவை முறையாகப் பயின்று அதை ஆழமாய் உணர்ந்து தெளிவாய் வெளிப்படுத்தியவர்களுள் கிருஷ்ணமாச்சாரியார் மிக முக்கியமானவர். ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து சென்னையில் மறைந்த அவருக்கு, யோகாவே மூச்சாக இருந்தது. அறிவியல் ரீதியாகப் பார்த்து ஒவ்வொன்றையும் ஏன், எதற்கு என்று அறிந்து பயிற்சியளிக்கிறார்கள் கிருஷ்ணமாச்சார்யா யோக மரபில் வந்தவர்கள். இவர்தான் பெண்களுக்கு யோகா மிகவும் முக்கியம் என்று சொல்லிப் பல பெண் யோகா ஆசிரியர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்.
ஒவ்வொரு அசைவையும் மூச்சோடு அணுகும் மரபு கிருஷ்ணமாச்சாரியாவின் மரபு. பயிற்சி முடிவில் பிராணாயாமமும் உண்டு. ஆழமாய் உள்ளுக்குள் அது செய்யும் வேலையைப் போகப்போக உணரலாம்.
இந்த மரபிலே எல்லா வயதினருக்கும் யோகா (ஆசனம், பிராணாயாமம், யோகா தத்துவம், தியானம்) உண்டு. ஆனால் ஒவ்வொரு பிரிவினருக்கும் அணுகுமுறை மாறுபடும். சிறுவர்களுக்கான யோகா அணுகுமுறை அவர்களின் வளர்ச்சித் தேவையை ஒட்டி அமையும். மற்றவர்களுக்குக் காலையில் செய்யும் பயிற்சி ஒரு மாதிரியாகவும் மாலையில் செய்யும் பயிற்சி வேறு மாதிரியாகவும் இருக்கும். நோய் உள்ளவர்களுக்கான அணுகுமுறை முற்றிலும் வேறானது. இது ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அணுகும் தன்மை கொண்டது.
யோகாவும் நோய்களும்
பிரச்சினையை அதிகப்படுத்தாமல் உரிய முறையிலான எளிய பயிற்சிகள் எத்தனையோ ஆண்டுகள் தீராத நோய்களைச் சரிசெய்துள்ளன - கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அறுவை சிகிச்சை என்று முடிவான பின்பு பலர் யோகச் சிகிச்சைக்கு வந்து நலமாய் வாழ்கிறார்கள். தரும் பயிற்சிகள் ஆசனமாக இருக்காது. ஆசனத்தைக் குறிப்பிட்ட நபரின் தேவைக்கு ஏற்ப மாற்றி, அதனோடு உரிய மூச்சைச் சேர்த்துத் தேவைப்பட்டபோது ஒலியையும் கூட்டிச் சரிசெய்யும் நேர்த்தி மிகவும் அரிதானது.
குழுவாகப் பலருக்கு அளிக்கப்படும் ஆசன - பிராணாயாமப் பயிற்சிகளை முறையாக அறிந்து சரியாகச் செய்யும்போது பயிற்சி செய்பவர்கள் நிறைய பலன்களைப் பெற முடிகிறது.
ஒவ்வொரு வகுப்பும் புதிதுபுதிதாக அமைந்து ஈடுபாட்டோடு பயிற்சி செய்யத் தூண்டும்போது பயிற்சியும் சற்று வலுவான மூச்சோடு அமையும்போது, ஒரு சில வகுப்புகளே யோகாவின் வலிமையை உணரச் செய்துவிடும்.
யோகாவும் ஆளுமையும்
உடல், மூச்சைத் தாண்டி மனம், ஆளுமை என்று விரியும் தன்மை யோகாவுக்கு உண்டு. அது யாரிடம் எந்த மாதிரியான பயிற்சிகளை எவ்வளவு நம்பிக்கை, ஈடுபாட்டுடன் செய்கிறார்கள், எவ்வளவு நாள் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமையும். பயிற்சியின் தொடக்கக் கட்டத்தில் மனம் அமைதியாக இருக்கிறது, தூக்கம் நன்றாக உள்ளது, நாள் முழுவதும் செயல்திறனுடன் இருக்கிறேன். உடல் வலி குறைந்துள்ளது, மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பார்கள். அதற்கு மேல் நாடி, நரம்புகள், இதயம், நுரையீரல், குடல், ரத்த ஓட்டம், மூச்சு ஓட்டம் சீரடைவதை அவர்கள் உணரச் சில நாட்கள் ஆகும்.
ஒவ்வொரு ஆசனமும் முதுகெலும்பை மையமிட்டே இருப்பதால் அது ஆரோக்கியம் பெறுகிறது. வயிறும் மார்பும் ஆரோக்கியம் பெறுகின்றன. இப்படிப் பல நிலைகளில் நமக்குக் கிடைக்கும் ஆரோக்கியம் பெரும் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
மதமும் யோகாவும்
யோகா மதத்தைப் போதிப்பது எனப் பலர் நினைக்கிறார்கள். யோகாவுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் கிடையாது. உதாரணமாக, கிருஷ்ணமாச்சாரியா யோக மரபில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எனப் பலரும் பயில்கிறார்கள். யாரும் எதையும் வலியுறுத்துவதில்லை. எந்தப் பயிற்சியும் யாருடைய மத உணர்வை அல்லது மதம் சாராத உணர்வைத் துளியும் தொந்தரவு செய்வதில்லை.
யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. அது மனம், ஆழ்மனம் என ஊடுருவிச் செல்லக்கூடியது. மொத்த வாழ்க்கையையும் ஆரோக்கியமான விதத்தில் மாற்றக்கூடியது. இதன் மூலம் நாள் முழுவதும் புத்துணர்ச்சி, செயல்திறன் ஆகியவை சகஜமாகக் கைவரும். பயிற்சி ஆழமாகவும் தீவிரமாகவும் இருந்தால் வேறு பல விதங்களிலும் அதன் விளைவை உணர முடியும்.
திறந்த மனதோடு யோகாவை முயன்று பாருங்கள். உங்கள் உடல், மனம் ஆரோக்கியமடையலாம். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படலாம்.

No comments:

Post a Comment