hot sale

Wednesday, 3 February 2016

இந்தியன் என்றால் என்ன?

இந்தியன் என்றால் என்னது தம்பி?
=================================

சாதியும் இருக்கும்;
மதமும் இருக்கும்;
சாத்திரம் மக்களை
வேறெனப் பிரிக்கும்!

மோதலும் இருக்கும்;
முதலாளி இருப்பான்;
முன்னேற்றம் சிலர்க்கே
வாய்ப்பாக இருக்கும்!

குந்தியே தின்பான்
ஒருவன்; மற்றவன்
குடல்வற்றிச் சாவான்;
இவற்றிடை யாவரும்

இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சம்மென்றால்
எப்படித் தம்பி?
கொள்ளையன் ஆள்வான்;
கொடுமைகள் செய்வான்;
கொடுக்கும் உரிமைகள்
கொடாது தடுப்பான்!

வெள்ளையன் ஆண்டதும்
வெறியர் ஆள்வதும்
வேறுபா டின்றி
விளங்கிடும் தம்பி!

முந்திய ஆட்சியை
அடிமைஎன் றார்கள்!
முன்னினும் இவர்கள்
அடிமைசெய் தார்கள்!

இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சமமென்றால்
எப்படித் தம்பி?
-பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1988

No comments:

Post a Comment